Monday, April 16, 2012

மொத் மொத்தென்று ஹன்சிகா மோத்வானி! யார் கல்? யார் கண்ணாடி?

பாந்தமான முகம்.. சிரிப்பில் வெள்ளந்தித்தனம்.. பார்வையில் பரிதவிப்பு.. இயக்குவதற்கு ஏற்ப இயங்கும் பாடி லாங்வேஜ்.. சரளமான பேச்சு.. இதுதான் உதயநிதி.
ஹீரோ பில்ட் அப் இல்லாமல் சாதாரணமாக வந்து போகும் கதாபாத்திரம் என்பதால் இவரெல்லாம் ஏன் நடிக்க வேண்டும்? என்று பெரிதாக அவர் எரிச்சல் ஏற்படுத்தவில்லை.
டான்ஸ் ஆடுவதில் பாக்யராஜ் இடத்தைப் பிடித்து விடுவாரோ என்று முதலில் எழுந்த சந்தேகத்தை அடுத்தடுத்த பாடல்களில் ஓரளவுக்குத் தேறி/ஆடி இல்லாமல் செய்து விட்டார் சண்டைக் காட்சியே இல்லாததும், அதை வலிந்து திணிக்காததும் பெரும் ஆறுதல்.
உதயநிதியின் உயரம் இன்னதென்று அறிந்து, அவருக்கு இணையான முக்கியத்துவத்தை காமெடியன் சந்தானத்துக்கு தந்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். மொத் மொத்தென்று வரும் ஹன்சிகா மோத்வானியை யாருக்கும் மொத்த வேண்டும் போல் தோன்றும்.
வெண்ணெயில் தோய்த்தது போல் அப்படி ஒரு தேகம். உன்னை எனக்கு பிடிக்கல.. என்று உதயநிதியின் பெர்சனாலிடியை முகத்திலடித்தாற் போல் சொல்லி நிராகரித்தபடியே இருக்கிறார் ஹன்சிகா. உதயநிதியும் வாயைத் திறந்து கொண்டு ஜொள் வடித்தபடியே அவர் பின்னால் சுற்றுகிறார்.
ஹீரோவையும் ஓரளவுக்கு அழகாகக் காட்ட வேண்டும் என்று கேமராக்காரரும் காஸ்ட்யூமரும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். இந்த மூஞ்சிக்கு கொழுக் மொழுக் ஹன்சிகா கேட்குதாக்கும்? என அடித்தட்டு ரசிகன் மனதில் இயல்பாக உதிக்கின்ற இந்தக் கே(ள்வி)லியைத்தான் படம் முழுக்க தூவியிருக்கிறார்கள்.
இதெல்லாம் தேவைதானா என்று அறிவுஜீவிகள் மட்டுமே வெறுக்கின்ற வெளிநாட்டுப் பாடல் காட்சிகளும் உண்டு. ஹீரோவின் வீரதீரத்தை வெளிப்படுத்துகின்ற வழக்கமான க்ளைமாக்ஸாக இல்லாமல், அந்த இடத்தில் ஆர்யாவை அலப்பறை செய்யவிட்டிருப்பது நல்ல திருப்பம். ஹாரிஸ் ஜெயராஜும் இசையில் குறை வைக்கவில்லை.
பாடல்கள் அத்தனையும் துள்ளல் ரகம். ப்ரட்யூசர் கம் ஹீரோ, அவரது தாத்தா (கலைஞர்), தந்தையின் (மு.க.ஸ்டாலின்) அரசியல் பின்னணி என எதையும் கருத்தில் கொள்ளாமல், ஏன் கதையில் கூட பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்க வேண்டும் என வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தி யூத்ஃபுல்லாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்.
அதற்கு கை(தட்டு) மேல் பலன். சினேகாவும் தலைகாட்டும் அந்த விமான காட்சி நகைச்சுவையின் உச்சம்! காமெடியால் தான் படம் ஓடுகிறது என்று சந்தானம் பெயர் வாங்கினாலும் பரவாயில்லை. உதயநிதி முதன் முதலில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் கல்லா கட்டுகின்ற வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.
என்னோட சொந்தக் காசுல படம் எடுக்கிறேனாக்கும். பிரேமுக்கு பிரேம் நான் தான் வருவேன்.. பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசுவேன்.. நூறு பேரை நான் ஒத்த ஆளு அடிச்சு தூள் கிளப்புவேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல், தன்னை உணர்ந்து அடக்கி வாசித்திருக்கும் உதயநிதி, கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே கலைஞரின் கெட்டிக்காரப் பேரன் என்ற பெயர் எடுத்திருக்கிறார்.
மொத்ததில் சிரிப்பு என்ற ஒரு கல்லை வைத்துக்கொண்டு ரசிகர்களின் மனக்கண்ணாடியில் படர்ந்திருக்கும் கவலைகளை உடைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment