01.காதல் வயப்படும் மனநிலை

மனித வாழ்வில் பலவகையான பருவ நிலைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப் பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும் அந்தந்த பருவ நிலைக் கேற்ப உடல் மற்றும் மன நிலைகளில் மாறுதல்கள் தோன்றக்கூடும், நலமான வாழ்க்கை என்பது பொதுவாகவே நலமான உடல், நலமான மனம் என்ற இரண்டையும் உள்ளடக்கியதுதான். ஒன்றுக்கொன்று தொடர்புடையதும் கூட, நலவாழ்விற்கு உடல், மனம் என்ற தனிமனித பக்கமும் சமூகம் என்ற மூன்றாம் பக்கமும் உண்டு. இந்த மூன்று பக்கங்கள் அல்லது முப்பரிமானங்கள் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய காரணத்தினால் ஒன்றின் குறை ஒன்றை பாதிக்கவே செய்யும். உடல் குறை மனதைப் பாதிக்கும், பாதிக்கப்பட்ட மனநிலை உடல் நலனைப் பாதிக்கும். சமூகச் சூழல் உடல், மனம் இவ்விரண்டையுமே பாதிக்கும் தன்மை உடையது.
இது தாண்டிய ஆன்மீக உணர்வு என்பது உடலையும், மனதையும் பாதிக்க வல்லது. தெளிவாக சொல்லப்போனால் மாற்றவல்லது என்றாலும் கூட இக்கட்டுரையில் ஆன்மீக தொடர்பு பற்றி நாம் பேசப் போவது இல்லை. அதிலும் குறிப்பாக வளர் இளம் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இங்கு தொட்டுச் செல்லப் போகிறோம். மேலை நாட்டு மருத்துவமான ஆங்கில மருத்துவத்தில் நாம் முன்னர் பேசி ஒருங்கிணைந்த விஷயங்களான உடல் நலம், மனநலம், மூன்றாவதான சமூகநலம் என்ற மூன்றின் ஒருங்கிணைந்த நலப்போக்கு [INTEGRATED HEALTH PERPECTIVE] அவ்வளவாகக் காணப்படுவதில்லை. ஆங்கில மருத்துவத்தில் நல வாழ்க்கை எது என்று கேள்வி கேட்கப்படும் பொழுது அது சிக்கலான கேள்வியாக இருக்கிறது.
மனிதர்களின் நல வாழ்வுக்கு பொறுப்புடைய அரசுகள் பெரும்பாலும் மேலைநாட்டு மருத்துவத்தின் அடிப்படையிலேயே பார்க்கின்றன. அரசு மருத்துவமனைகள் மேலைநாட்டு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்ற காரணத்தினால் பெரும் செலவில் மருத்துவ நிலையங்கள் (மருத்துவ கல்வி + மருத்துவமனைகள்) நடத்தப்படுகின்றன. பல பரிசோதனை ஆய்வுகள், கருவிகள் சார்ந்ததாகவே இருக்கிறது. அதனால் குணப்படுத்துதல் என்பது பணத்தின் அடிப்படையில் அமைந்து விடுகிறது. எல்லா மக்களுக்கும் சென்றடையக் கூடிய மருத்துவம் மாற்று மருத்துவம்தான், ஏனெனில் இது ஒரு ஒருங்கிணைந்த நலவாழ்வு கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.
வளர் இளம் பருவத்தில் பாலியல் மாற்றம் மற்றும் பாலியல் உறுப்புகள் வளர்ச்சி காரணமாக ஒரு சுதந்திரப் போக்கினை மனதில் இனம் கண்டு கொள்ள முடியும். இது பெரும்பாலும் உடல் இயல் சார்ந்ததாகவே இருக்கின்றது. இதுவரை பெற்றோர்கள் கூறும் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த வளர் இளம் பருவத்தினர் தம் வயது ஒத்தவர்களின் ஆலோசனைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள். இது சுதந்திரமான மனக்போக்கின் முதல் அறிகுறி ஆகும். இந்த கால கட்டங்களில் பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை அறிவுரையாக கூறுவதை விடுத்து ஆலோசனைகளாகக் கூறும் போக்கினை கைக் கொள்ள வேண்டும். குழந்தைத்தனமாக வாழ்க்கையில் நோக்குகின்ற போக்கிலிருந்து இந்த பருவத்தினர்கள் முற்றிலும் விடுபட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியாது எனவே இவர்களை வயது முதிர்ந்தவர்களாக தங்களை தாங்களே கருதிக் கொள்வார்கள். தங்கள் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் வயது ஒத்தவர்களிடமே பகிர்ந்து கொள்ளும் காரணத்தினால் அவர்களுடைய தோழமை யார், யாரிடம் இருக்கின்றன என்பதிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை உடையவர்களோடு பழகுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்த பருவத்தினரிடம் அதிகம் காணப்படும். எதிர் பாலினரிடம் அதிக கவர்ச்சி தோன்றக் கூடிய பருவம் இது. இதில் மிக அதிகமான கண்டிப்பு காட்டுவதன் மூலம் பெற்றோர்கள் தங்களிடமிருந்து வளர் இளம் பருவத்தினரை நெருக்கமான மன உறவு நிலையிலிருந்து தள்ளி வைத்துவிடும் அல்லது கண்டு கொள்ளாத மனநிலை தோன்ற வாய்ப்பு ஏற்பட்டு விடும். [DISTANTING OR INDIFFERENT ATTITUDE] எதிர் பால் இனக்கவர்ச்சி காரணமாக தங்களை மிகவும் அழகு படுத்திக் கொள்கின்ற ஆர்வம் மிகுதியும் காணப்படும். கண்ணாடியின் முன்பு அதிக நேரம் நின்று தங்களை முன்னும், பின்னும் பார்த்து தங்களாகவே தங்கள் உடலை ரசிக்கும் போக்கும் காணப்படும். இதை மிகப்பெரிய தவறாக எண்ணிவிடக் கூடாது. அழகு சாதனங்கள் மூலம் தங்கள் அழகை மிகைப் படுத்திக்கொள்ள எண்ணுகின்ற இவர்களின் போக்கை வியாபார நோக்கோடு பயன்படுத்துகின்ற விளம்பரங்கள் இன்றைய கால கட்டத்தில் மிக, மிக அதிகம், தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த மனப்போக்கை முதலீடாக வைத்துத்தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.
அன்பு என்பது ஒரு அற்புதமான உணர்வு அது தீவிரமானதாக ஆகும்பொழுது அதனை காதல் என்றும் சொல்லலாம். இந்த அன்பு அல்லது பாசம் பரிமாற்றத்தின் மூலம் தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அன்னை குழந்தையிடம் கொள்ளும் அன்பு, ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொள்ளும் அன்பு, மனிதர்கள் மிருகங்களிடம் கொள்ளும் அன்பு, குடும்பத்தார்க்கு இடையில் ஒருவருக்கொருவரிடம் ஏற்படுகின்ற அன்பு, மனிதர்கள் கடவுளிடம் கொள்ளும் அன்பு என்பதான இறை அன்பு என பல பரிமாணங்கள் உண்டு. என்றாலும் கூட காதல் என்றவுடன் ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகின்ற அன்பு என்பதாக மட்டுமே பல சமயங்களில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதுண்டு. வளர் இளம் பருவத்தினிரான ஆண் பெண் இடையே தோன்றும் இனக்கவர்ச்சி கூட பல சமயங்களில் தீவிரமான அன்பாக புரிந்து கொள்ளப்படுவதுண்டு. இவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய அன்பு பரிமாற்றம் உடலியல், பாலியல் ரீதியாக மாறி உடலுறவு கொள்ளுதல் என்னும் நிலையாக உருப்பெருமேயானால் அந்த அன்புறவு திருமணம் எனும் உறவாக முழுமை பெறாமல் முறிந்து விடும்போது அது பெருமளவில் பெண்களைத்தான் பாதிக்கும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.
அதிலும் ஆணாதிக்க சமூக அடிப்படையில் அமைந்துள்ள நம் இந்திய கலாச்சாரத்தில் இது போன்ற பாதிப்புக்குள்ளான ஆண்களை விட பெண்களுக்கு திருமண வாய்ப்பு என்பது மிகவும் அரிதாகி விடுவதாகவோ அல்லது திருமண வாழ்வுக்குப் பின் நிம்மதியற்ற வாழ்க்கையாக அமைந்துவிடவோ கூடும்.
எனவே வளர் இளம் பெண்கள் பூப்பு எய்தும் முன்னரே இது பற்றிய புரிதலை பக்குவமாக கற்றுத்தர வேண்டியது பெரியவர்களான எல்லாருடைய கடமையும், குறிப்பாக பெற்றோரின் கடமையும் ஆகும். இது படிக்கின்ற குழந்தைகள் மற்றும் பணி செய்யும் குழந்தைகள் எல்லோர்க்கும் பொருந்தக் கூடியது ஒன்றுதான், என்றாலும் பணி செய்யும் குழந்தைகளை விட பள்ளிக் குழந்தைகளிடம் இந்த காதல் வயப்படும் மனநிலை தோன்றும் போது படிப்பில் கவனம் சிதறுதல் காரணமாக தொடர்கல்வி கடுமையாக பாதிக்கப்படும்.
நம்மவர்களிடையே மனநல ஆலோசனைக்காக நிபுணர்களை கலந்து ஆலோசிக்கும் பழக்கம் மிகவும் குறைவு. அடிப்படை நிலையிலேயே இனம் கண்டு கொண்டால் மனச்சிதைவு ஏற்படும் நிலைக்கு தள்ளப்படாமல் தப்பிக்கலாம். ஆங்கில மருத்துவத்தைவிட ஹோமியோ மற்றும் மலர் மருத்துவங்களில் நல்ல குணம் பெற வாய்ப்புகள் உண்டு என்பதோடு மிகக்குறைந்த செலவிலேயே பூரண மிக்க நலம் பெறலாம்.
- மாற்று மருத்துவ இதழ்
02.உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை!
உயிரில்லாத உடலாக அம்மா என் முன்னே கிடந்த போது எனக்கு எட்டு வயது. அதுதான் நான் முதலில் பார்த்த மரணம். சாந்தமான ஒரு புன்னகையோடு அம்மா செத்துப் போயிருந்தாள். அம்மா இறந்து போனாள் என்றே நம்ப முடியாமல் தடுமாற வைக்கிற அற்புதமான, இயற்கையான புன்னகை. அன்றிலிருந்து இறந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் சாவைப் பற்றிய பயமோ அல்லது வேறு எதிர்மறையான எண்ணங்களோ எனக்கு வந்ததே கிடையாது.
ஒருவர் இறந்த உடனே உற்றார் உறவினர் கூடி அழுவதானாலோ, செய்தித்தாள்களில் 'மரண அறிவித்தல்' என்று விளம்பரப்படுத்துவதாலோ, அல்லது நகரின் சுவரெங்கும் 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டர் ஒட்டுவதாலோ, மரணம் ஒரு பொதுவான விஷயம் என்று எண்ணி விடாதீர்கள். மரணம் ரொம்ப பர்ஸனல் விஷயம்.
ஓஷோ சொன்னது போல உலக வாழ்க்கையில் இரண்டே இரண்டு அனுபவங்கள்தாம் அந்தரங்கமானவை. உங்கள் கனவுகளும் உங்கள் மரணமும். ஒருவன் போல இன்னொருவன் கனவு காணுவதும், ஒருவன் போலவே இன்னொருவன் இறப்பதும் சாத்தியமில்லாதவை. வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கை இன்னொருவர் போட இயலும். ஆனால் உங்கள் கனவை வேறொருவர் காண முடியாது.
மேற்கத்தியர்களின் பார்வையில் மரணம் ஒரு தீண்டப்படாத விஷயமாகவே இருக்கிறது. மரணம் பற்றிப் பேசவோ அல்லது விவாதிக்கவோ யாருமே அங்கு விரும்புவதில்லை. மரணம் பற்றிய பயமே அவர்களுக்கு அதிகம். மரணம் ஒரு கெட்ட விஷயமாக, எதிர்மறை சமாச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் முதுமை என்பதே ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாக பிரச்சாரம் செய்யப்பட்டு, ''வயதாகாமல் தடுப்பது எப்படி, எப்போதும் இளமையாக இருப்பது எப்படி, அதற்கு என்னென்ன அழகுச் சாதனங்கள் உபயோகப்படுத்த வேண்டும்'' என்றெல்லாம் வணிக வழிகளில் மக்களின் கவனத்தைத் திருப்புகிற வழிகளைப் பிரமாதமாகக் கையாளுகிறார்கள் அவர்கள்.
கீழை நாடுகளின் மரணம் பற்றிய பார்வை இதிலிருந்து மாறுபடுகிறது. ஓஷோவின் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் வழியே சொல்ல வேண்டுமென்றால் - பிறப்பும் இறப்பும் இரு பகுதிகள், நீண்ட பிரபஞ்ச வாழ்வின் இரு பகுதிகள்.
ஒவ்வொரு உள் வாங்கும் சுவாசத்திலும் நீங்கள் பிறக்கிறீர்கள், ஒவ்வொரு வெளி விடும் சுவாசத்திலும் நீங்கள் இறக்கிறீர்கள். ஆனால் இந்த இரண்டு எதிர்மறை நிகழ்வுகளுமே ஒரு வித ஒற்றுமையுடன் இயங்குவதால்தான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால் பிறக்கும்போதே நீங்கள் இறக்க ஆரம்பித்து விடுகிறீர்கள்.
பிறப்பும் இறப்பும் ஒரே நேரத்தில் தொடர்ந்து நிகழ்கிற வாழ்வின் இரண்டு அம்சங்கள். மரணம் என்பதை வாழ்வின் எதிரியாகவே எண்ணுகிற தவறான மனப்போக்கு நம் எல்லோருக்குமே இருக்கிறது. மரணம் இல்லாமல் வாழ்வு இல்லை. ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போலவே வாழ்வின் இரண்டு சிறகுகள்தாம் பிறப்பும் இறப்பும். ஒரு சிறகுடன் பறவை பறக்க முடியாது.
மரணம் உங்கள் எதிரி அல்ல. மரணம் உங்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒவ்வொரு முறை மூச்சு வெளிவிடும் போதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டுதானிருக்கிறோம். ஆனால் அதன் மீது இருக்கிற பயத்தினால்தான் மரணம் எங்கோ தொலைவில், ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் இருப்பதாக கற்பனை சுகத்தில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறோம்.
- சுவாமி சத்ய வேதாந்த் அவர்கள் உரையின் தமிழாக்கம்
நிலாச்சாரல்
தலைப்பு : படித்ததில் பிடித்தது
படிப்பது - போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும் !
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும். “காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற பேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங்களின்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும் விளங்கினார்.
03.நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற நல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.
வாங்கிப்படி
எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்தாராம்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது “புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே” என்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிற தாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.
“பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!” என்பார் கவிஞர் சுரதா. இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்ற ஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம். இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம். சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப்பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது. எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும். முன்பெல்லாம் தங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றாலும் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துப் பாதுகாப்பார்களாம். ஏன் தெரியுமா? தமது சந்ததியர்க்கு அவை பயன்படுமே என்றுதான். “புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியாது உப்பத்து அகமே வைப்பர்” என்கிறது ஒரு பழம்பாடல்.
நூல்களை அரிய செல்வமாகப் பல நாட்டினரும் மதித்துப் போற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்போம்.
சீன நாட்டிலிருந்து வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத்தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். அது அவர்களைத் தனதாக்கிக் கொண்டது. யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார். இதயத்தைத் தொடும் நிகழ்ச்சி மட்டுமன்று இது. இமயத்தை எட்டும் உயரிய நிகழ்ச்சியும் இது எனலாம்.
கி.பி. 23-74 இல் வாழ்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த “பிளினி” என்பவர் தம் நூலில் குறிப்பிடும் ஒரு செய்தி, “அரசர் டாரியஸ் மீது அலெக்ஸாந்தர் படையெடுத்துச் சென்று அவரைத் தோல்வி பெறச் செய்தபோது, அப்போர்க் களத்தில் வீரர் ஒருவர் உடலுக்கடியில் பொன்னால் செய்த கூடையொன்றில் நவரத்தினங்கள் பலவும் மலர்களும் திணித்து மற்றும் நறுமணப் பொருள்களும் நிரப்பி வைத்திருப்பதைக் கண்டார். அவ்வரிய கூடையின் பயனைப் பற்றி அலெக்ஸாந்தரின் வீரர்கள் பலர் பலவிதமாக எடுத்துக் கூறினர். ஆயினும் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்டுவிட்டு “இருப்பினும் கடவுள் ஹெர்குலிஸ் சாட்சியாகக் கூறுகிறேன். இக்கூடை ஹோமர் அவர்களுடைய காவியத்தை வைத்துப் பாதுகாக்க மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று ஆணையிட்டார். இதனாலும் நூல்கள் எந்த அளவு போற்றிக் காக்கப்பட்டன என்பதை அறிகிறோம்.
எது சிறந்த புத்தகம்?
பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே. படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.
தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடுகிறதோ, சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
புற்றீசல் போல புதுப்புது நூல்களும் பத்திரிகைகளும் தினந்தினம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் நமது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வேண்டியவை எவையெவை என்று தேர்ந்தெடுத்து உப்புச் சப்பில்லாத குப்பைகளை ஒதுக்கி விடுகிறதெளிவு வேண்டும். நல்ல நூல்களை மட்டும் வாங்கிப்படிக்க வேண்டும்.
நூலகங்கள்
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார்.
வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.
தமது துறைநூல்கள்
உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில் உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும்.
நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும்.
வாழ்வை முன்னேற்றும் வளமான நூல்கள்
மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.
நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.
தமிழில் வந்துள்ள தன்னம்பிக்கையை வளர்க்கும் தரமான நூல்கள் இதோ.
1. அப்துற்றகீமின் “வாழ்க்கையில் வெற்றி”
2. அகிலனின் “வாழ்க்கையில் வெற்றி”
3. வ.உ.சி.யின் “மனம் போல் வாழ்வு”
4. மு. வரதராசனாரின் “நல்வாழ்வு”
5. விடுதலை கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுரைகள்”
6. இல.செ. கந்தசாமியின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்”
7. எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ணங்கள்”
8. பி.சி. கணேசனின் “உங்களால் முடியும்”
9. மெர்வினின் “வாழ்க்கை உன் கையில்”
10. பெரு. மதியழகனின் “நினைவாற்றல் மேம்பட வழி”
ஆகியவை படிக்கப் படிக்க உங்களை வெற்றிக்கு ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தவை.
இங்கே குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான சிறந்த நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். குறைந்தது இவற்றையாவது படிப்பது போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும்.
படிப்பதும் தியானமே
புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை.
புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால் போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில் இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும். வாசிக்கிறசுகம் அவர்களை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்று விடும். சிலர் வீட்டிற்குச் சென்றால் கழிப்பறையில் கூட புத்தகம் இருக்கும். புத்தகத்தை சரஸ்வதியாக்கி பூசையறையில் வைத்து வாசிக்காமல், பூசை போடுவதை விட நேசிக்கிற புத்தகத்தைக் கழிப்பறையில் வாசிப்பதில் ஒன்றும் குற்றமில்லை. அது வாசிக்கப்படுகிறதா? என்பது தான் முக்கியம். எங்கே வாசிக்கப்படுகிறது என்பதன்று.
மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
முன்னேற்றத்திற்குப் பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக் கூடியது மனிதநேயமாகும். அப்படி என்றால், மனிதநேயம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
சக மனிதனை நேசிக்கிற மாண்பு, சக மனிதனை மனிதனாகப் பார்க்கிற அணுகுமுறை. தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும், தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கிற தன்மை. சக மனிதனைப் பாசத்தோடும், பரிவோடும், கருணையோடும் நோக்கும் அன்பு நிலையே மனிதநேயம்.
வள்ளுவரும் வள்ளலாரும்
இதுதான் உயிருள்ள மனிதனின் இயல்பான நிலை, இயற்கையான நிலை. “அன்பின் வழியது உயிர் நிலை” என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எனவேதான் தந்தை பெரியார் மனிதனை நினை என்றார். ஆண்டவனைக்கூட “அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை’ என்கிறார் வள்ளலார்.
மனித நேயம் மரணத்தைத் தடுக்கும்
மனிதனை நேசிக்கிற மனிதனை நினைக்கிற தன்மை இருக்குமெனில் வீழ்ச்சி என்பதே இல்லை, வளர்ச்சி என்பது மட்டுந்தான். முன்னேற்றமே மிஞ்சி நிற்கும் பின்னேற்றம் இருக்காது. அன்புமயமான சூழலில் தனி மனிதனுக்கோ… சமூகத்திற்கோ, அல்லது நாட்டிற்கோ முன்னேற்றத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.
அன்பான மனிதன், சக மனிதன் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் அல்லற்படுவதைக் கண்டும் காணாமல் கிடக்க இயலுமா? தனக்குப் போக மிஞ்சியிருப்பதை சக மனிதனுக்குப் பகிர்ந்தளித்துப் பசியாற்றினால் எங்காவது இல்லாமையும், பட்டினிச்சாவும் இந்த மனிதகுலத்தில் நிகழுமா?
விழாக்களில் விரயம் தவிர்ப்போம்
ஈந்து உவந்த வாழ்க்கை இன்றில்லை. வருவோர் போவோர்க்கெல்லாம் பசியாற்றிய பண்பாடும், விருந்தோம்பிய வீட்டுத் திண்ணைகளும் இன்றில்லை. விதை நெல்லைக்கூட எடுத்துச் சமைத்து விருந்தோம்பியவர்கள் தமிழர்கள் என்பதை நமது இலக்கியங்கள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம் திருமண விழாவின் போது பல்லாயிரக் கணக்கானவர்களை அழைத்து இதுபோல யாரும் இப்படி நடத்தியதில்லை என்று சொல்லும்படியாகச் செய்ய வேண்டும் என்று ஒன்றை மற்றொன்று விஞ்சுகிறவகையில் வசதி படைத்தவர்கள் ஏராளமாக உணவையும், பொருளையும் விரயமாக்குகிற செயல்கள் பெருகி வருகின்றன.
சொந்தபந்தங்களை மிக நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து மண விழாக்கள் நடைபெற்றால் சில நூறு பேர்களுடன் முடிந்து விடும். இப்படி திருமணத்தின் பெயரால் நடத்தப்படும் உணவுப் பொருள் விரயத்தைத் தவிர்த்தும் அதையே அரசுக்குத் தொகையாக தந்தால் நாட்டில் பட்டினியாய் யாரும் இல்லை என்றநிலையை உருவாக்கிடலாம். இன்னும் ஒருபடி சென்று மதுவுக்கும், புகைக்கும் செலவழிக்கிற பணத்தை மிச்சப்படுத்தினால் ஏழைகளுக்கு முப்போதும் உணவளிக்க முடியும். இதற்கு மனிதநேயம் இருந்தால் போதும். பட்டினிச்சாவுகள் இல்லாத நாடே முன்னேறிய நாடு.
வள்ளுவரும் பாரதியும்
‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’
என வள்ளுவர், பசியால் வாடும் மக்களைப் படைத்த மகேசனையே சாடுகிறார். பாரதியோ ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடு வோம்’ என்று பசியால் பரிதவிக்கும் நிலைகண்டு இந்தப் பார்தான் அதற்குக் காரணம் என்று எண்ணிய பாரதி மனிதநேயம் இல்லாத இந்த மண்ணுலகம் இருந்தென்ன பயன் என்கிறார்.
வேற்றுமையை வேரறுப்பது மனிதநேயம்
மனிதனை நேசிக்கிற எந்த ஒரு மனிதனாலும் சக மனிதனை தீண்டத்தகாதவனாகப் பார்க்க முடியுமா? மனிதனை நேசிக்கிற எந்த மனிதனும், பிறப்பின் அடிப்படையிலான பேதங்களைப் போற்றமாட்டான். பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் இல்லாத நாட்டில் சக மனிதனுக்குச் சம உரிமை அளித்துப் பார்க்கிற சமநோக்கு இருக்கும். எங்கே உரிமைகள் சமமாகிறதோ, உள்ளன்போடு தன்னைச் சூழ்ந்துள்ள மனிதனையும் நேசிக்கிறசூழல் மலர்கிறதோ அங்கே சமவுடைமை இயல்பாக நிலவும். எங்கே உரிமையும், உடைமையும் சமமாகிக் கிடக்கிறதோ அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதம் இருக்காது. ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படாது. ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அன்பின் ஆதிக்கமே மிகுந்திருக்கும்.
தீண்டாமையும், பிறவி பேதமும், இனபேதமும் இல்லாத நாட்டில் அனைவரும் கல்வி பெற, வேலை வாய்ப்புகளைப் பெற, அவரவருக்குத் தேவையான அடிப் படை வசதிகளையும் பெற தடையிருக்காது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற நிலையிருக்கும். அங்கே முன்னேற்றம் மட்டுமே இருக்கும்.
எல்லோர்க்கும் எல்லாமும் என்ற நிலையில் திருட்டுக்கு வழியிருக்க முடியுமா? ஒருவனுடையதை மற்றவன் அபகரிக்கும் சூழ்நிலை இல்லாத சூழல் இனிமையானதாகத்தானே இருக்க முடியும். எல்லோருக்கும் வேலை இருந்து விட்டால் “சாலையோரத்தில் வேலையற்றதுகளும் இருக்காது. வேளையற்றதுகளின் உள்ளத்தே விபரீத எண்ணங்களுக்கும் வேலை இருக்காது” விபரீத எண்ணங்கள் விளையாத நாட்டில் விளைவது முன்னேற்றம் மட்டுமே!
சத்குருவின் தத்துவ விளக்கம்
நாட்டில் மட்டுமன்று வீட்டிலும் தான். மனித நேயம் மலிந்து கிடக்கிற இல்லத்தில் மனவருத்தத்திற்கு இடமில்லை. ஆணும், பெண்ணும் அன்புடன் நட்போடு வாழும் வாழ்வில் மகிழ்ச்சியும், இன்பமும், ஆனந்தமும் நிலைத்திருக்கும். இஃதென்ன அன்பு, மகிழ்ச்சி, இன்பம், ஆனந்தம் என்கிறீர்களா?
“உடல் நிலையை ஒரு சுகமான, இனிமையான நிலையில் வைத்திருந்தால் அதனை ஆரோக்கியம், இன்பம் என்கிறோம். மனநிலையில் ஓர் இனிமை யான நிலையிருந்தால் இதனை மகிழ்ச்சி என்கிறோம். உணர்ச்சி நிலையில் இனிமையான நிலை நிலவினால் அதனை அன்பு, நேசம் என்கிறோம். உயிர்சக்தி நிலையில் இனிமையான நிலை ஏற்பட்டால் பேரானந்தம் என்கிறோம்” என்பது சத்குருவின் விளக்கம்.
அன்பும், இன்பமும், மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிறைந்த மனிதர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை உலகின் எந்த சக்தியாவது தடுத்து நிறுத்திவிட முடியுமா? மனித நேயமிக்க அன்புமயமான குடும்பங்கள் வாழும் சமூகத்தின் முன்னேற்றம் எப்போதும் மேட்பட்டே இருக்கும். முன்னேற்றமான வாழ்வைக் கொண்ட சமூகங்களைக் கொண்ட நாடே வளர்ந்த நாடாகும்.
போர் ஒடுங்கில் புவி ஓங்கும்
வளர்ந்த நாடுகளை வல்லரசு என்கிறார்கள். வல்லரசுகள் வல்லூறு அரசுகளாக இருப்பது எதனால்? மனிதநேயம் மங்கிக்கிடப்பதனால். மனிதநேயம் இருக்கிற எந்த மனிதனும் அடுத்த மனிதன் மீதும், அடுத்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்த மாட்டான். எப்போது ஒரு மனிதன் அடுத்த மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ? அங்கே சண்டையில்லை. எப்போது ஒரு நாடு அடுத்த நாட்டின்மீது ஆதிக்கம் செலுத்தவில்லையோ அங்கே போர் இல்லை. எங்கே போர் இல்லையோ அங்கே வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் உறுதி.
ஆனால் மனிதநேயம் மரித்துப் போனால் ஆணவம் ஆதிக்கம் செலுத்தும். ஆணவம் எங்கெல்லாம் ஆதிக்கம் செய்கிறதோ அங்கெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். வன்முறை எங்கு நிகழ்ந்தாலும் அழிவே மிஞ்சும். முன்னேற்றம் முடங்கிப் போகும்.
அன்பு மலருமிடத்தில், மனிதநேயம் மிளிருமிடத்தில் ஆணவத்திற்கும், ஆதிக்கத்திற்கும் இடமில்லை. அன்பு செத்துவிட்ட அல்லது வற்றிப்போன மனிதர்களிடையில் வன்முறையே எஞ்சும். வன்முறையின் முடிவு முன்னேற்றமன்று. அன்பு அடம்பிடிக்கும் வாழ்வில் முன்னேற்றம் இடம் பிடிக்கும். சிகரத்திற்குச் செல்ல தடம் அமைக்கும். ஆணவம் ஆதிக்கம் செலுத்தும் வாழ்வில் குழப்பமும், வெறுப்பும், வன்முறையும், அழிவுமே மிஞ்சும்.
மனிதநேயத்தை வளர்ப்பது எப்படி?
மனிதநேயத்தை வளர்க்கத் தேவையில்லை. பிறக்கிறமனிதன் நேயமுள்ள அன்புள்ள மனிதனாகத்தான் பிறக்கிறான். அன்பாக இருப்பதே மனிதனின் இயல்பான தன்மை. வெளியிலிருந்து யாரும் கொட்டி நிரப்பத் தேவையில்லை. அன்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே இருக்கிறது.
“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே”
என்று கவிஞர் பாடினார். ஆகவே அன்பை வளர்க்கத் தேவையில்லை. அதை வளர அனுமதித்தால் போதும். அது பொங்கி வழியும்.
இயற்கையிலேயே உங்களுக்குச் சொந்தமாக அமைந்திருக்கும் ஓர் உணர்வு அன்பு மட்டுமே. பரிவு, இரக்கம், கருணை, நட்பு என்று பலவகையான குணங்களின் ஒட்டு மொத்தமே அன்பு.
குழந்தைகள் இரக்கத்தின் விதைகள். விதைக்குள் முளைப்பு இருப்பதுபோல மனிதனுக்குள் நேயம் நிரம்ப இருக்கிறது. குழந்தைகளும் அன்புக்காக ஏங்குகிறார்கள். மாறிவரும் பொருள் மைய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் பொருள் ஈட்டுவதில் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுகிறவர்கள், குழந்தைகளிடம் அன்பைப் பொழியக்கூட நேரமில்லை, அல்லது அது நிகழவில்லை.
பிள்ளைகளைப் பேணும் முறை
ஒரு மனிதன் அன்பான நிலையில் பேசுவதெல்லாம், சிந்திப்பதெல்லாம் நேர்மறையாகவே இருக்கின்றன. ஆனால் அன்பற்றுப் போன மனிதனின் பேச்சில், எண்ணத்தில், செயலில் எதிர்மறையே ஏகோபித்து இருக்கிறது. நமது பிள்ளைகளிடம் கூட பெற்றோர் பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களைத்தான் பேசுகிறார்கள். இது நன்று அன்று என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். எப்போதும் குழந்தைகளிடம் செல்லாதே, பேசாதே, ஓடாதே, சிரிக்காதே என்று எதிர்மறையாகப் பேசுவதற்கு பதில் இதைச் செய்க. இப்படிச் செய்க, இது நல்லது, இது சிறந்தது என்று நேர்மையாக இனிமையாகச் சொல்லி வழிகாட்ட வேண்டும்.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்
என்பார் வள்ளுவர்.
இதைச் செய்யாதே என்று தடை போடும் போது இளமையின் வேகம் அதை மீறிப்பார்க்க விரும்புகிறது. சில நேரங்களில் வெறும் விளையாட்டுத் தனங்களிலும், சின்னத்திரை, வண்ணத் திரை, பொழுது போக்குகளிலுமே ஆழ்ந்து அமிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் கண்டு பல பெற்றோர்கள் ஆவேசமாகத் திட்டுகிறார்கள், கடுமையாகவும் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்கிறார்கள்.
இது ஆபத்தானது, அத்தகைய குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் அறிந்து மனமாற்றம் செய்யத்தவறினால், அவர்களின் ஆற்றலுக்கு கரையமைத்து நெறிப்படுத்தத் தவறினால் பெற்றோருக்கு விரோதிகளாகி சமூகத்துக்கு விரோதமான மனிதர்களாக, வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாக, நேர்வழி தவறியவர்களாக மாறிப்போகிறார்கள்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைச் செல்வங்களிடம் அன்பைப் பொழியவில்லையானால் இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிணைப்பு அழிந்து, உறவுகள் அழிந்து, பெற்றோர்கள் முதுமையில் அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்குவதான நிலை வளர்ந்துவிடும். பெற்றோர்களைப் பேணிப் புறந்திடாத பிள்ளைகள் உள்ள நாடும் வாழ்வும் முன்னேற்றமாக இருக்க முடியாது. வெறும் பொருள் வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிட்டது. அகம் சீரழிந்தால் அனைத்தும் சீரழியும். அகம் என்றால் உள்ளம், அகமென்றால் இல்லம்.
04.நற்பண்பு (Virtue)
கடல் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது. வெள்ளை மணல்களை வெகு அரிதாகவே சிற்றலைகள் தொட்டன. விரிந்த வளைகுடாவைச் சுற்றி, வடபுறம், நகரம் இருந்தது. தெற்கே, ஈச்ச மரங்கள் கடலைத் தொடுமளவு நெருங்கி நின்றன. ஆழமற்ற நீர்ப்பரப்பினுள் நின்ற மணல்மேட்டிற்குப் பின், ஆழம் நிறைந்த கடலிலே சுறாக்கள் தென்பட ஆரம்பித்தன. அவற்றுக்குப் பின்னே மீனவர்களின் - வலிமையான கயிற்றினால் கட்டப்பட்ட மரத்துண்டுகளாலான - கட்டுமரங்கள் தெரிந்தன. அவை ஈச்ச மரங்களுக்கு தெற்கேயிருந்த ஒரு சிறு கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தன. சூரிய அஸ்தமனம் மிகவும் சிலாகிக்கத்தக்கதாய் இருந்தது; அது எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய திசையிலே நிகழவில்லை - மாறாக கிழக்கிலே நிகழ்ந்தது; அது ஒரு நேரெதிர் சூரிய அஸ்தமனம் ஆகும். மிகப்பெரிய மற்றும் பல வடிவங்களாலான மேகங்கள், நிறமாலையின் எல்லா நிறங்களாலும் ஒளியூட்டப்பட்டிருந்தன. அது ஒரு மிகவும் அருமையான - அதே நேரத்தில், காண்போருக்கு ஏறக்குறைய ஒருவிதமான அவஸ்தையை உண்டாக்குகிற காட்சி. கடல்நீர் ஒளிமிகுந்த நிறங்களையெல்லாம் உள்வாங்கி, பின் அவற்றால் தொடுவானத்திற்கு ஒரு கண்கவரும் நேர்த்தியான பாதையமைத்திருந்தது.
வெகுச்சில மீனவர்கள் நகரத்திலிருந்து தங்கள் கிராமத்திற்கு திரும்பி நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். ஆனால், கடற்கரை ஏறக்குறைய வெறிச்சோடி, நிசப்தமாயிருந்தது. ஒற்றை நட்சத்திரம் மேகங்களுக்கு மேலே தெரிந்தது. நாங்கள் திரும்பி நடந்தபோது, ஒரு பெண்மணி எங்களுடன் சேர்ந்தபடி, முக்கியமான விஷயங்கள் குறித்தெல்லாம் பேசத் தொடங்கினார். அவர் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வாழ்விற்கு அடிப்படையான நற்பண்புகளைத் தியானித்து, பண்படுத்தி வளர்ப்பதாகவும் அவர் சொன்னார். அங்கே, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும், ஒரு நற்பண்பு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குப் பின் வருகிற நாட்களில் அது பண்படுத்தி வளர்க்கப்பட்டு, நடைமுறையில் செயல்படுத்தப்பட்டது. அவருடைய நடத்தை மற்றும் பேச்சிலிருந்து, அவர் சுயக்கட்டுப்பாட்டைக் (SELF-DISCIPLINE) கற்றுத் தேர்ந்தவர் என்றும், ஆனால் அவரின் மனநிலையுடனும், நோக்கங்களுடனும் இணங்காதவர்களிடம் ஓரளவு சகிப்புத்தன்மையற்றவர் என்றும் தோன்றியது.
நற்பண்பு என்பது இதயத்தைச் சார்ந்தது - மனத்தை அல்ல. மனமானது நற்பண்பைப் பண்படுத்தி வளர்க்கும்போது, அது ஒரு கபடம் நிறைந்த திட்டமிடல் ஆகும்; அது ஒரு தற்காப்பு - சூழ்நிலைக்கேற்ப புத்திசாலித்தனமாக அனுசரித்துப் போதல். சுய - பூரணத்துவம் (SELF-PERFECTION) என்பதே நற்பண்பை மிகவும் நிராகரித்தல் ஆகும். பயம் இருக்கிற இடத்திலே நற்பண்பு எப்படி இருக்க முடியும் ? பயமானது மனத்தைச் சார்ந்தது - இதயத்தை அல்ல. பயமானது தன்னை - நற்பண்பு, கெளரவம், இணக்கம், தொண்டு மற்றும் இன்னபிற என்று பலவிதமான வடிவங்களில் மறைத்துக் கொள்கிறது. உறவுகளிலும், மனத்தின் செயற்பாடுகளிலும் பயம் எப்போதும் உயிர் வாழ்கிறது. மனமானது அதன் செயற்பாடுகளில் இருந்து தனித்துப் பிரிந்த ஒன்றல்ல - ஆயினும் மனம் தன்னைப் பிரித்துக் கொள்கிறது; அதன்மூலம் மனமானது தனக்குத் தொடர்ச்சியையும் நிலையானத்தன்மையையும் (PERMANENCE) அளித்துக் கொள்கிறது. ஒரு குழந்தை பியானோவைப் பழகுவது போல - தன்னை மேலும் நிரந்தரமாக்கிக் கொள்ளவும், வாழ்க்கையைச் சந்திப்பதற்கு வலுவாக்கிக் கொள்ளவும், அல்லது தான் எதை மிகவும் உன்னதம் (THE HIGHEST) என்று நினைக்கிறதோ அதை அடைவதற்காகவும் - மனம் மிகவும் தந்திரத்துடன் நற்பண்பைப் பயில்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க நிச்சயம் குறை காணக்கூடிய பலவீனம் (VULNERABILITY) வேண்டும் - சுய-உறையிலிடப்பட்ட (SELF-ENCLOSING) நற்பண்பு என்கிற மதிப்பிற்குரிய சுவர் அல்ல. மிகவும் உன்னதமான ஒன்று அடையப்பட முடியாதது; அதை அடைய எந்த வழியும் இல்லை; அதை அடைய கணக்கிடப்பட்ட படிப்படியான வளர்ச்சி முறைகள் இல்லை. உண்மை தானாக வரவேண்டும், நீங்கள் உண்மைக்குப் போக முடியாது, உங்களின் பண்படுத்தி வளர்க்கப்பட்ட நற்பண்பு உங்களை உண்மைக்கு அழைத்துச் செல்லாது. நீங்கள் எதை அடைகிறீர்களோ, அது உண்மை அல்ல; மாறாக அது உங்களின் சொந்த சுயப்பிதுக்கமான (SELF-PROJECTED) ஆசைதான். ஆனால், உண்மையில் மட்டும்தான் பேரானந்தம் இருக்கிறது.
தன் சுய - சாசுவதமானத் தன்மையில் (SELF-PERPETUATION) இயங்குகிற மனத்தின் தந்திரமான பொருந்திப்போதல் (ADAPTABILITY), பயத்தை நிலைநிறுத்துகிறது. இந்தப் பயம் தாம் மிகவும் ஆழமாக நிச்சயம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் - எப்படி நற்பண்புடையவராயிருத்தல் என்பதல்ல. ஓர் ஆழமற்ற மனம் நற்பண்பைப் பயிற்சி செய்யலாம்; ஆனால் அது அப்போதும் ஆழமற்றதாகவே இருக்கிறது. அப்போது - நற்பண்பு என்பது மனத்தின் ஆழமற்றத்தன்மையிலிருந்து ஒரு தப்பித்தலே ஆகும்; ஆழமற்ற மனமானது அப்படிச் சேகரிக்கிற நற்பண்புகளும் ஆழமற்றவையாகவே இருக்கும். இந்த ஆழமற்றத் தன்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால், அப்புறம் எப்படி உண்மைநிலையைப் (REALITY) புரிந்து கொள்ள முடியும் ? ஓர் ஆழமற்ற நற்பண்புடைய மனமானது எப்படி, அளவிடமுடியாத்தன்மைக்குத் தன்னைத் திறந்து வைக்க இயலும் ?
மனத்தின் இயக்கத்தைக் கிரகித்துக் கொள்ளும்போது - 'நான் என்கிற நிலை'யைப் (SELF) புரிந்து கொள்ளும்போது - அங்கே நற்பண்பு பிறக்கிறது. நற்பண்பு என்பது சேகரித்து வைக்கப்பட்ட எதிர்ப்பல்ல; அது தன்னிச்சையான விழிப்புநிலையும், எதுவொன்றைக் குறித்தும் 'இது என்ன?' என்று புரிந்து கொள்ளுவதுமாகும். மனம் எதையும் புரிந்து கொள்ள முடியாது; அது புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களைச் செயலாக மாற்றக் கூடும்; ஆனால், அதற்குப் புரிந்து கொள்கிற திறமை இல்லை. புரிந்து கொள்வதற்கு முழுமையான அங்கீகரித்தலும், ஏற்றுக் கொள்ளுதலும் தேவை. அவற்றை மனம் அமைதியாக இருக்கும்போது மட்டுமே இதயம் தர இயலும். மனத்தின் அமைதியானது தந்திரமான திட்டமிடலினால் விளைவதல்ல. அமைதிக்கு ஆசைப்படுவது என்பது முடிவற்ற முரண்பாடுகளும், வலியும் நிறைந்த சாதனை என்கிற சாபமாகும். 'ஒன்றாக ஆக வேண்டும்' என்பதான அடங்காத ஆசை - அது நேர்மறையானதாக அல்லது எதிர்மறையானதாக இருந்தாலும் - இதயத்தின் நற்பண்பைத் தடுக்கிறது. நற்பண்பு என்பது முரண்பாடும் சாதனையும் அல்ல; நீடித்தப் பயிற்சியும் அதன் விளைவும் அல்ல; மாறாக, அது - சுயப்பிதுக்கத்தினால் விளையும் ஆசைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் என்கிற நிலையில் இல்லாத ஒன்றாகும். ஒன்றாக ஆக வேண்டும் என்கிற போராட்டம் தொடர்கிற வரை, அங்கே நற்பண்பு இல்லை. ஒன்றாக ஆகவேண்டும் என்கிற போராட்டத்தில், எதிர்ப்பும் நிராகரிப்பும் இருக்கிறது, இந்திரிய நிக்ரகமும் கைவிடுதலும் இருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் விட்டு வெளிவருவது நற்பண்பல்ல. நற்பண்பு என்பது ஒன்றாக ஆகவேண்டும் என்கிற அடங்காத ஆசையிலிருந்து விடுபடுகிற சுதந்திரத்தின் சலனமற்ற அமைதியாகும். இந்தச் சலனமற்ற அமைதி இதயத்திலிருந்து வருவது - மனத்திலிருந்து அல்ல. பயிற்சி, நிர்ப்பந்தம், எதிர்ப்பு ஆகியவற்றின் மூலம் மனமானது தன்னை நிதானப்படுத்திக் கொள்ளலாம்; ஆனால், அத்தகைய ஒழுக்கமானது இதயத்தின் நற்பண்பை அழித்து விடுகிறது. இதயத்தின் நற்பண்பின்றி - அங்கே அமைதியில்லை, அங்கே பரமானந்தம் இல்லை. ஏனெனில், இதயத்தின் நற்பண்பு என்பது எதையும் புரிந்து கொள்ளுவதாகும்.
05.முதலில் இல்லை; முழுமையில் இருக்கிறது
உலக அளவில் அதிகம் பேர் பேசும் மொழி ஆங்கிலம் என்பதை நாம் அறிவோம். அந்த மொழியில் அதிகம் மதிக்கப்படும் இலக்கிய ஆசிரியன் யார் எனக் கேட்டால் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைக் குறிப்பிடுவார்கள்.
இங்கிலாந்தில் பிறந்து (1564-1616) ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான சானட் என்னும் கவிதை வடிவத்தில் 154 கவிதைகளையும், கதை தழுவிய இரண்டு நீள்கவிதைகளையும் எழுதியிருந் தாலும் உலக நாடக இலக்கியத்தின் பிதாமகனாகச் ஷேக்ஸ்பியரை அறியச் செய்தவை அவரது 38 நாடகங்கள் தான். இன்பியல் நாடகங்களாகவும், துன்பியல் நாடகங்களாகவும் அவரது படைப்புக்களைப் படிப்பது என்பதுதான் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான பகுதி என்று கூடச் சொல்வார்கள். அவரது வரிகளை மேற்கோளாகச் சொல்வதை ஆங்கில மொழிக்காரர்களும், ஆங்கில இலக்கியம் கற்றவர்களும் விரும்பிச் செய்வதுண்டு.
அதிக எண்ணிக்கையில் பேசும் மொழியாகத் தமிழ் இல்லையென்றாலும், அதிக நாடுகளில் ஆட்சி மொழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட தொடர்பு மொழியாகவும் இருக்கும் இந்திய மொழி தமிழ் என்று சொல்லலாம். இந்தியாவைத் தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அரசாங்க அலுவல்கள் நடக்கும் மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையின் உள் நாட்டுப் போர் காரணமாக இன்று தமிழர்கள் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி, தமிழ் என்னும் மொழியின் இருப்பை உலக நாடுகளின் பார்வைக்குக் கொண்டு போய்விட்டனர்.
அகதிகளாகத் தமிழர்கள் அலையும் படி ஆகி விட்டது என்ற வருத்தம் ஒரு புறம் இருக்கிறது என்றாலும், குடியேறிய ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் என்னும் மொழி பேசும் மனிதக் கூட்டத்தின் இருப்பை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. துன்பத்தில் விளைந்த இன்பம் இது எனச் சொல்லிக் கொள்ளலாம்.
செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே உலகப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் மொழியாகவும், கற்பிக்கும் மொழியாகவும் தமிழ் இருக்கிறது. தென்னாசியக் கல்வி மையங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் துறை, இந்திய மொழிகள் துறை, கீழைத்தேசங்களின் பண்பாட்டுத்துறை என்னும் பெயர்களில் உலகப் பல்கலைக் கழகங்களில் இயங்கும் துறைகள் தமிழ் மொழி அல்லது தமிழக வரலாற்றை ஒரு பாடமாகக் கற்பிக்கின்றன. அவ்வாறு கற்பிக்கவில்லை என்றால், கற்பிக்கப்படும் இந்தியாவின் பண்டைய வரலாற்றில் முக்கியமான பகுதியாகவாவது தமிழ் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை நினைத்துத் தமிழர்கள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அத்தகைய பெருமையுடைய தமிழ் மொழியில் அதிகம் மேற்கோள் காட்டப்படும் இலக்கியம் அல்லது இலக்கியவாதி யார் எனக் கேட்டால் சரியான புள்ளி விவரங்களோடு நம்மால் பதில் சொல்ல முடியாது.
நிகழ்காலத் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட வாக்கியம் பாரதியின் வரிகளாக இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் தமிழர்கள் அதிகம் மேற்கோள் காட்டும் வரிகளுக்குச் சொந்தக்காரன் அய்யன் திருவள்ளுவர் என்றே நினைக்கிறேன். பேருந்துகள் தொடங்கி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் திருக்குறளின் ஆட்சி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பொதுக் கட்டுரைகளிலும் சரி மேடைப் பேச்சிலும் சரி திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை என்றால் அது சிறந்த கட்டுரையாகவோ, சிறந்த மேடைப் பேச்சாகவோ கருதப்படும் வாய்ப்பில்லை என்றே தமிழர்கள் நம்புகிறார்கள். தொடர்பு இருந்தாலும் இல்லை யென்றாலும் முன்னுரையிலோ முடிவுரையிலோ ஒரு குறளைச் சொல்லி முடித்து விட்டு முழுத் திருப்தி அடையும் பலரை நான் பார்த்திருக்கிறேன். தனிமனித வாழ்க்கைக்குத் தேவையான யோசனைகள் என்றும், பொது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் எனவும் கருதி வள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் ஏதாவதொன்றைத் தமிழர்கள் மேற் கோளாகக் காட்டுவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
வெறும் பதின்மூன்றே வரிகளை எழுதிய ஒரு தமிழ்க் கவிஞனும் தமிழில் அதிகம் மேற்கோள் காட்டப்படுபவனாக இருக்கிறான் என்று சொன்னால் பலர் ஆச்சரியம் அடையலாம். "யாதும் ஊரே; யாவரும் கேளிர்"’ இந்த வாக்கியமும் மேடைகளிலும் எழுத்துக்களிலும் தமிழர்கள் மேற்கோள் காட்டும் வாக்கியம் தான். திருக்குறளுக்கு அடுத்து அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை வரியாகக் கூட இதைச் சொல்லலாம். இந்த வரியை முதன் வரியாகக் கொண்ட கவிதையை எழுதிய கணியன் பூங்குன்றன், அதன் 13 வரிகளைத் தவிர வேறு எந்த இலக்கியத்தையும் எழுதவில்லை. ஒரே ஒரு கவிதையை எழுதித் தமிழ் பரப்பையே தனதாக்கிக் கொண்டவன் பூங்குன்றன்.
கணியன் பூங்குன்றனின் முதல் வரியான "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்ற புறநானூற்று வரியைச் சொல்லி விட்டு, "உலகத்தில் உள்ள எல்லா ஊரையும் தனது ஊராகவும், அங்கு வாழும் எல்லா மக்களையும் தனது உறவினர்களாகவும் கருதி வாழ்ந்தவன் பண்டைத் தமிழன் என முழக்கமிடும் மேடைப் பேச்சுக்களை நான் பலதடவை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். அப்படிப் பேசுபவர்கள் எப்போதும் அதன் அடுத்தடுத்த வரிகளுக்குள் நுழைவதே இல்லை. திடீரென்று "பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என அகக்கவிதையின் கடைசி இரண்டு வரிகளுக்குத் தாவி, பண்டைத் தமிழர்கள், "பெரியவர்- சிறியவர் என்று பாகுபடுத்திப் பார்க்கும் குணங்கள் இல்லாதவர்கள்; அனைவரையும் சமமாக மதிப்பதே அவர்களது பொதுக்குணம் என்று கூறி முடிப்பார்கள்.
கவி கணியன் பூங்குன்றன் உண்மையிலேயே இந்த அர்த்தத்தில் தான் அந்தக் கவிதையை எழுதியிருக்கிறானா? முழுக் கவிதையையும் நிதானமாக வாசிக்கும் ஒருவர் அப்படிச் சொல்லமாட்டார்.
இதோ கவிதை:
யாதும் ஊரே யாவருங் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே;
முனிவின், இன்னா தென்றலும் இலமே;
‘மின்னொடுவானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழி படூஉ மென்பது திறவோர்
காட்சியின் தௌந்தனம், ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமோ!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
[கணியன் பூங்குன்றன்/ புறநானூறு / பாடல் எண்:192]
இந்தக் கவிதையின் அடுத்தடுத்த வரிகளின் பொருளை விளக்கிக் கொண்டே வந்தால் அதன் சாராம்சம் இதுவரை நாம் மேடைகளில் பேசியதல்ல என்பது புரிந்து போகும்.
இந்தக் கவிதையின் மையமே அதில் வரும் , நீர்வழிப் படூஉம் புணைபோல் என்ற உவமையில் தான் இருக்கிறது. மனித உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு என்பது எப்படிப் பட்டது என்றால் ‘’மல்லல் பேரியாற்று நீரில் அடித்துக் கொண்டு வரப்படும் புணை அதாவது தெப்பம் போன்றது. அதற்கு நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. நீர் போகும் போக்கில் புணை போவது போல் , உயிரும் இருக்கும் அல்லது போகும்’. இதைச் சொல்வதுதானே கணியன் பூங்குன்றனின் மைய நோக்கமாக இருக்கிறது.
இந்த மைய நோக்கம் அவன் காலத்தில் எழுச்சி பெற்ற பௌத்தத்தின் நிலையாமைத் தத்துவத்தின் சாரம் என்று கூடச் சொல்லலாம். ஒவ்வொருவரும் இந்த உலக வாழ்க்கை தரும் இன்ப துன்பங்களைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்; தப்பித்தல் என்பது சாத்தியமில்லை எனப் பேசும் நவீன இருப்பியல் வாதமும் கூட இதைத் தான் சொல்கிறது. நிலையாமையை அல்லது இருப்பியலின் சாரத்தைப் பேசும் கணியன் பூங்குன்றனின் கவிதை மேடைப் பேச்சுகளுக்கான மேற்கோள் வாக்கியமாக மாறி, மொத்த அர்த்தத்தையும் இழந்த ஆச்சரியம் எப்படி நடந்தது ?
இந்தக் கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதில் முழுமையைத் தேடுவது தமிழர்களின் வேலையாக இல்லை என்பதுதான். ஒரு தலைவனை அல்லது ஒரு இயக்கத்தை ஆதரிப்பதானாலும் சரி, எதிர்ப்பதானாலும் சரி தமிழர்களுக்கு ஒரேயொரு காரணம் போதும். இப்படித்தான் தமிழர்களின் பொதுப்புத்தி பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் ஆபத்தானது. ஒரு படைப்போ அல்லது இயக்கமோ அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, சாராம்சமாக என்ன இருக்கிறது எனப் பார்ப்பதுதான் முழுமையான மனிதனின் அடையாளம். அதை நோக்கித் தமிழர்களின் பொதுப்புத்தையைத் திருப்பும் வரிகளை எழுதும் படைப்பாளிகளே நிகழ்காலத்தின் படைப்பாளிகளாக இருக்கப் போகிறவர்கள்.