Thursday, May 3, 2012

மனச்சோர்வு நோய் பற்றிய விளக்கம்

மனச்சோர்வு நோய்


மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர்  சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி  தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே.  இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு  நம்மை அறியாமலே நீங்கி விடும். 

ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.

இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.

மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள் :
  • 1.   எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும் சாயந்திர  வேளைகளில் இது சற்றே மாறலாம்  )
  • 2.  வாழ்க்கை மேல் பிடிப்பு இல்லாமை .எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
  • 3.  சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை. 
  • 4.  முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
  • 5.  எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
  • 6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
  • 7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
  • 8. தூக்கமின்மை.  (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
  • 9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
  • 10. தன்னம்பிக்கை இல்லாமை,
  • 11.   தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
  • 12. எளிதில் எரிச்சல் அடைதல்,
  • 13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
  • 14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல். 
  • 15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு  முழுவதும் வலி, குடைச்சல் --இவை கூட மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.  


உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளது என்பதை அறியவே பல வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகலாம் . 

நிறைய நேரங்களில் நீங்கள் அறிவதற்கு முன்பே , உங்கள் நெருங்கிய  உறவினர்கள் மற்றும் நண்பர்கள்,  (உங்கள் நடத்தையில் உள்ள மாற்றங்களை அறிந்து கொண்டு )   இதனை உங்களிடம் தெரிவிக்கும்  நிலை வரலாம்.

மனச்சோர்வு நோய் எதனால் ஏற்படுகிறது?


பெரும்பான்மையான நேரங்களில் நம்மை மனதளவில் பாதிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மன உளைச்சல் உருவாக்கும் விஷயங்கள் தான் மனச்சோர்வு நோய் உருவாவதற்கு காரணமாகிறது.

சில வகையான உடல் உபாதைகள் கூட மனச்சோர்வு நோயை உண்டாக்கும்.

சில நேரங்களில் எந்த விதமான மன உளைச்சலோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாத நேரத்திலும் மன சோர்வு நோய் உருவாகலாம்.

மனச்சோர்வுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:

குடும்ப சூழ்நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு. ( குடும்ப உறவில் சச்சரவு,  மணவாழ்க்கையில்  பிரச்னை,  பணபிரச்சனை அலுவலகம் மற்றும் நண்பர்களுடன் பிரச்னை இவையாவும் இதில் அடங்கலாம் )

சிலவகையான உடல்நலகேடுகள் (தை ராய்ட்  நோய் பாதிப்பு , சில வகையான வைரஸ்  நோய்கள் தாக்குதலக்கு பின்,  சில வகையான புற்று நோய் பாதிப்புக்கு பின்னால், மாரடைப்புக்கு பிறகு, மூளை பாதிப்புகளுக்கு பின்னால்), மனச்சோர்வு நோய் ஏற்படலாம் .

மேலே குறிப்பிட்டவை சில உதாரணங்களே .

மரபு வழியாகவும்  மனச்சோர்வு நோய் வரலாம் . இதனால் சில குடும்பங்களில் அதிக  பேருக்கு மனச்சோர்வு நோய் இருப்பதை காணலாம்.

 குடிபழக்கம் அல்லது போதை பழக்கம் உள்ளவர்களுக்கு மனச்சோர்வு நோய் அதிகமாக வரலாம்.

 மனச்சோர்வு நோய் உள்ளவர்கள் அதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மது பழக்கத்துக்கும் போதை பொருள் உபயோகத்திற்கும் அடிமை ஆவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஆண்களை விட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும்.

உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா?
நீங்கள் செய்ய வேண்டியது இதோ:


உங்கள் நோய்க்கு உரிய அறிகுறிகளை உங்கள் நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களிடமோ மனம் திறந்து கூறுங்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு உங்கள் செயல் மற்றும் நடவடிக்கைகளில் உள்ள மாறுதல்கள் மனச்சோர்வு நோயினால் ஏற்பட்டது என்று புரியும்.

நீங்கள்  தினசரி செய்ய வேண்டிய வேலைகளை (மனம்
மற்றும் உடல் சோர்வினால் ) பிறகு செய்து கொள்ளலாம்  என்று ஒதுக்காமல் முடிந்த வரை அப்பொழுதே  செய்யப்பாருங்கள். ( அதிக நேரம் எடுத்தாலும் ).

பசியுணர்ச்சி இல்லாவிட்டாலும் அந்தந்த வேளைகளில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
                                                                
நாள்தோறும் சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று, சரியான நேரத்தில் எழுந்து விடுங்கள்.

   தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துகொண்டோ, தொலைகாட்சி பார்த்துகொண்டோ இருங்கள்.
தூக்கம் வரவில்லை என்பதற்காக படுக்கையை விட்டு எழுந்து செல்லாதீர்கள்)

காலையில் விழித்தவுடன்  உடனே எழுந்து விடுங்கள்.

உடல் மற்றும் மன அசதியினால், தூக்கத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்தாலும் கூட மேலும் படுக்கையில் படுக்காமல் உடனே எழுந்து விடுங்கள்.

இப்படி செய்தால்  சில மணி நேரங்களில் நீங்கள் ஒருவாரான மனமலர்ச்சி அடைவீர்கள்.

அப்படி செய்யாமல் படுக்கையில், உறங்கினால், தூக்கமும் வராமல் மேலும் உடல் மற்றும்  மனச்சோர்வை அடைவீர்கள்.

மனச்சோர்வு நோயினால், உருவாகும் தாம்பத்திய உறவின் மீதான நாட்டமின்மை, அந்நோய் குணமானவுடன் சரியாகி விடும். அதனால் இதை பற்றி மிகவும் கவலை கொள்ள வேண்டாம்.

தாங்களாகவே மனச்சோர்வுக்கு மருந்தாக மது அருந்த வேண்டாம்.
அது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தும் .

உங்கள் மனச்சோர்வுக்கு காரணம் ஆக உள்ள  குடும்ப பிரச்னைகள், பணபிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். 

ஒரு நாளில் அரை மணியோ அல்லது ஒரு மணியோ உடல் பயிற்சி செய்யுங்கள். இது நடை பயிற்சியோ அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாகவோ இருக்கலாம்.

மேலும் செய்ய வேண்டியது:

  • உங்கள்  மருத்துவரிடம் சென்று, உங்கள் நோய் அறிகுறிகளை கூறினால், அவர்  உங்களுக்கு மனச்சோர்வு நோய் உள்ளதா, அப்படி இருந்தால் எத்தகைய தீவிரத்தில் உள்ளது என்பதை கண்டறிந்து உடனே மருத்துவம் செய்வார்.

  • தற்காலத்தில் இந்த நோயை குணமாக்க சிறந்த மருந்துகள் உள்ளன. 

  • அவை உங்கள் நோயை போக்கி உங்களை பழைய மனிதர் ஆக்கும்.


    உங்கள் மருத்துவர் சில சமயங்களில் உங்களை மன நல மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க பரிந்து உரைப்பார்.

    இந்த நோயை குணமாக்க மனப்பயிற்சியும்  உதவும்.  

    இத்தகைய மன பயிற்சியை  அதற்குரிய பயிற்சி பெற்ற  செவிலியர்கலோ  அல்லது  மன நல வல்லுனர்களோ வழங்குவர். 

  • மனச்சோர்வு நோயை, நீங்கள் செய்த ஏதோ தவறினால் வந்தது என்று அணுகாமல் , ஒரு வகையான நோய் என்றும் , அது குணமாக்க வல்லது என்றும் புரிந்து கொண்டால் நீங்கள் விரைவிலேயே குணமடைவீர்கள்.

     மனச்சோர்வு நோய் பற்றிய அறிமுகமே இது.

    இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்     

மனநலம் பற்றிய விழிப்புணர்வு

மனநலம

மனநலம் என்றால் என்ன?
ஒரு நாடு சுபிட்சமடைய, சுகாதாரம் முக்கிய அம்சமாகும். “நோய்கள் அல்லது சுகாதார கேடின்றி இருப்பது மட்டுமல்ல: சுகாதாரம் என்பது உடல், மனம், சமுதாயம் மற்றும் ஆன்மீக நலன்களையும் உள்ளடக்கியது” என்று உலக சுகாதார நிறுவனம் (World health Organization - WHO ) சுகாதாரம் பற்றி வரையறுத்துள்ளது. ஒரு தனிநபரின் மனநலம் என்பது, தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துதல், அன்றாட வாழ்வியல் போராட்டங்களை தாங்கி முன்னேறுதல், நன்றாக வேலைகளை செய்தல், சமுதாயத்துக்கு தன்னாலான பங்கீட்டை சரியாக அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அது மேலும் கூறியுள்ளது. இதன் அடிப்படையில், மனநலம் என்பது தனிநபர் மற்றும் சமுதாயத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு முக்கியம் என்பது அறியப்படுகிறது.
மனநலம் கீழ்கண்டவற்றை அதிகம் பாதிக்கிறது:
  • கல்வி முன்னேற்றம்
  • பணித்திறன்
  • தனிநபர்களுக்கிடையே நேரிடை நல்லுறவை மேம்படுத்துதல்
  • குற்றங்களின் எண்ணிக்கை
  • குடி மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

மனநலம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
450 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, 2020-ம் ஆண்டு வாக்கில், மன அழுத்தம் உலகின் இரண்டாவது பெரிய நோயாக மாறிவிடும் (முர்ரே மற்றும் லோபஸ், 1996). இது, முன்னேறிய மற்றும் முன்னேறி வரும் நாடுகளின் குணமாக்கும் திறனை விட அதிகமாக இருக்கும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இதற்கென செய்யப்படும் முதலீடுகளை மனநோய்களை குணமாக்கத் தேவைப்படும் முதலீடுகளைக் கருத்தில் கொண்டு, அவற்றை தடுத்தல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சையளித்தல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இவ்வாறு, மனநலம் என்பது, உடல்நலம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுடன் நேரிடையாக தொடர்புடையதாகிறது.
  • மன அழுத்தம் காரணமாக இருதய மற்றும் இரத்தநாள நோய்கள் உருவாகின்றன என்று சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனநலம் உடல் நலத்துடன் நேரிடையாக தொடர்புடையது.
  • சரியாக உண்பது, தொடர்ச்சியான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுதல், புகையிலை மற்றும் மது பயன்படுத்துதல் ஆகியவைகளும் கூட மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றன.
  • வேலையின்மை, குடும்பங்களின் சிதைவு, வறுமை, போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை, மனநலக் குறைபாடுகளால் உண்டாகின்றன.
  • மனநலக்குறைவால், நோய் எதிர்ப்புத்திறன் குறைவதற்கும் வாய்ப்புள்ளது.
  • இதனால், மன அழுத்த நோய்க்கு உள்ளானவர்கள், மற்றவர்களைவிட மிககுறைந்த அளவே முன்னேற்றமடையமுடியும்.
  • நீண்ட நாள் நோய்களான,நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் போன்றவற்றால், மன அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள்?
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றில் சமூகத்தால் வேறுபாடுகள் காட்டப்படுவதால், மனநல நோய்களுக்கான மருத்துவ உதவி பெற தாமதம் ஏற்படுகிறது. மனநல நோய்கள் பற்றிய தெளிவின்மை, குறிப்பான அறிகுறிகள் இல்லாதது ஆகியவை காரணமாக, நோய் கண்டறிவதிலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மனதளவில் வலு குறைந்தவர்கள் மற்றும் ஆவிகளால் மனநோய்கள் ஏற்படுதவதாக மக்கள் கருதுகிறார்கள்.
  • மனநோய்களை குணப்படுத்த முடியாது என்ற கருத்து பெரும்பாலான மக்களிடையே நிலவுவதால், மருத்துவ சிகிச்சை பெற தயங்குகிறார்கள்.
  • முன் தடுப்பு முயற்சிகள் பலனளிக்காது என்றே பலரும் கருதுகிறார்கள்.
  • மனநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள், பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும், அவற்றை மறக்க இயலாத அடிமைத்தனத்தை உண்டாக்கிவிடும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த மருந்துகளால் தூக்கம் மட்டுமே ஏற்படுவதாகவும் மக்கள் நினைக்கிறார்கள்.
  • உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்களின்படி, மனநோய்களால் உண்டாகும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்குத் தேவையான நிதி பற்றாக்குறை பல நாடுகளில் நிலவுகிறது.
  • பல நாடுகளில் சமீபத்தைய காலம் வரை, மனநோய் மருத்துவமும், பிற நோய்களுக்கான மருத்துவமும் பிரித்தே கையாளப்பட்டு வந்துள்ளன.
  • பல மூடநம்பிக்கைகள் நிலவுவதாலும், சரியான புரிதல் இல்லாததாலும், மனநோய் உள்ளோர் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்வந்து செயலாற்றத் தயக்கம் காட்டுகின்றனர்.
  • தன்னார்வ நிறுவனங்களும் கூட, மனநோய் மருத்துவத்துறையை கடினமானது என்று நினைப்பதாலும், மனநோயாளிகளை கையாள தயங்குவதாலும், இத்துறையில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

மனநோய்கள் எதனால் ஏற்படுகின்றன?
உடல்ரீதியான காரணிகள்:
  • நியுரோ டிரான்மீட்டர்கள்: மூளையில் நியுரோ டிரான்மீட்டர்கள் எனப்படும் சிறப்பு இரசாயனங்களின் அசாதரணமான நிலைப்புத்தன்மைக்கும் மனநோய்களுக்கும் தொடர்புகள் இருப்பதாகக்கூறப்படுகிறது. மூளையில் உள்ள செல்களுக்கிடையே தகவல் தொடர்பு ஏற்பட நியுரோ டிரான்மீட்டர்கள் உதவுகின்றன. இவை சரியாக வேலை செய்யாவிட்டாலோ அல்லது அவற்றின் அளவுகள் நிலையில்லாமல் இருந்தாலோ, மூளையில் தகவல்கள் சரியாக பரிமாறிக்கொள்ளப்படாமல், மனநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • மரபியல்: பரம்பரையாக தோன்றுவதால், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மனநோய் இருந்தால், பிறருக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தகைய பாதிப்பு, மரபணுக்கள் மூலமாக சந்ததிகளுக்கிடையே கடத்தப்படுவதால் இவ்வாறு உண்டாகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களில் கோளாறுகள் இருந்தால், மனநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவேதான், பரம்பரையாக அத்தகைய மரபணுக்களை ஒருவர் பெற்றிருந்தாலும், அவர் மனநோய் இல்லாமலும் இருக்கக்கூடும். பல மரபணுக்களின் கூட்டுச் செயல்பாடுகளோடு, மனஅழுத்தம், துக்க நிகழ்வுகளின் தாக்கம் ஆகிய பிற காரணிகள் இணையும் போது, அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ள நபர் இந்நோயால் தாக்கப்படுகிறார்.
  • நோய்தொற்றுகள்: சிலவகை நோய்தொற்றுகள், மூளையில் பாதுப்புகள் எற்படுத்துவதால் மனநோய்கள் ஏற்படலாம் அல்லது அதிகரிக்கப்படலாம். உதாரணமாக, ஸ்ட்ரோகாக்கஸ் பாக்டீரியா (Streptococcus bacteria) தொற்றுக்கும், பீடியாட்ரிக் ஆட்டோஇம்யூன் ந்யூரோ சைக்கியாட்ரிக் டிஸார்டர் (pediatric autoimmune neuropsychiatric disorder - PANDA) என்ற நிலைக்கும் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளிடையே, அப்ஸஸிவ் கம்பல்சிவ் டிஸார்டர் (obsessive-compulsive disorder) மற்றும் பிற மனநோய்கள் ஏற்படக்கூடும்.
  • மூளை பாதிப்புகள் அல்லது காயங்கள்: மூளை பாதிப்புகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் காயங்களால், சில வகை மனநோய்கள் ஏற்படுகின்றன.
தேசிய மனநலக் கொள்கைகள் (National mental health policies), மனநலக்குறைபாடுகள் பற்றி மட்டுமல்லாமல், அவை ஏற்படக் காரணமாக உள்ள பல விரிவான விஷயங்களையும் உணர்ந்து, அவற்றை தீர்க்கும் முயற்சிகளை செய்யவேண்டும். மனநலம் பற்றிய கருத்துக்களை சுகாதாரம் மட்டுமன்றி, கல்வி, வேலைவாய்ப்பு, நீதி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு ஆகிய அரசு மற்றும் தனியார்த் துறைகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் நடவடிக்கைக?
மனநல மேம்பாடு தொடர்பான நோக்கங்களை வலுப்படுத்துவதற்கு, அரசுகளுக்கு WHO ஆதரவு அளிக்கிறது. மனநலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் இதை ஒருங்கிணைத்தல், அவற்றை பரவலாக்குதல், திட்டமிடுதல் ஆகியவற்றுக்காக அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது. குழந்தைகள் மத்தியில் இந்நோயை முன்னரே கண்டறியும் நடவடிக்கைகளுக்கு (உதாரணமாக கர்ப்பிணிகளை இல்லத்திலேயே சந்தித்தல், பள்ளி செல்லும் முன்பான விளையாட்டு நிகழ்ச்சிகள், வசதியற்ற ஏழைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் மனநல திட்டங்கள்) ஆதரவளிக்கப்படுகிறது.
  • குழந்தைகளுக்கான திட்டங்கள் (உதாரணமாக, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள். குழந்தைகள் மற்றும் இளையோருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள்)
  • பெண்களின் சமூக பொருளாதார வளர்ச்சி (உதாரணமாக, கல்வி மற்றும் நுண்கடன் திட்டங்களை எளிதில் அணுக உதவுதல்)
  • வயதில் மூத்தோருக்கான ஆதரவுத் திட்டங்கள் (உதாரணமாக, தோழமை முயற்சிகள், மூத்தோர் மையங்கள்)
  • சிறுபான்மையினர், பழங்குடியினர், இடம்பெயர்ந்தோர், பேரிடர்கள் மற்றும் சண்டைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் (உதாரணமாக, பேரிடர்களுக்கு பிறகு வழங்கப்படும் மனநல ஆலோசனைகள்)
  • பள்ளிகளில் மனநலன் மேம்பாட்டு திட்டங்கள் (உதாரணமாக, பள்ளிகளில் சூழல் மேம்பாடு, குழந்தைகள் தோழமை கொண்ட பள்ளிகள்)
  • பணிச்சூழலில் மனநலன் சார்ந்த நடவடிக்கைகள் (உதாரணமாக, மன அழுத்தம் குறைக்கும் நடவடிக்கைகள்)
  • வன்முறை தடுப்புத் திட்டங்கள் (உதாரணமாக, சமுதாயக் காவல் திட்டங்கள்), சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் (உதாரணமாக, ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள்)