இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டு இருந்த இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன.
இத்தீர்மானத்துக்கு எதிராக 15 நாடுகள் வாக்களித்தன.
08 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இப்பிரேரணையை ஆதரித்து இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்திருக்கின்றது.
இது சர்வதேச அரசியல் அரங்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கம்ரூன், சிலி, கொஸ்தாரிகா, செக் குடியரசு, குவாத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி,லிபியா, மொரிசியஸ், நைஜீரியா, பேரு, போலந்து, மால்டோவா, ரூமேனியா,ஸ்பெயின், சுவிஸ், அமெரிக்கா, உருகுவே ஆகிய நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், பங்களாதேஸ், சீனா, கொங்கோ, கியூபா, ஈகுவடோர், இந்தோனேசியா, குவைத், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா, மௌரித்தானியா ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராகவும் வாக்களித்து இருக்கின்றன.
அங்கோலா, ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனிகல், புர்கினா பார்சோ, பொட்சுவானா, ஜிபூட்டி ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வைப்பதே இப்பிரேரணையின் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இலங்கை அரசால் இறுதி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டன என்று கூறப்படுகின்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஐ. நா சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
இருப்பினும் இது சம்பந்தப்பட்ட நிழல் யுத்தம் சர்வதேச அரங்கில் தொடரும் என்பதும் இலங்கையின் எதிர்கால இராஜதந்திர நகர்வுகளை இன்றைய வாக்கெடுப்பு தீர்மானிக்கும் என்றும் தெரிகின்றது.
இலங்கையின் அமைச்சரவையில் மாற்றம் ஒன்று விரைவில் கொண்டு வரப்பட கூடும் என்றும் மனித உரிமைகள் அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றுக்கு வேறு அமைச்சர்கள் நியமனம் பெற கூடும் என்றும் தெரிகின்றது.
அதே நேரம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் மாற்றப்படலாம் என்றும் புதிதாக தமிழர் ஒருவர் சுவிஸிற்கான இலங்கைத் தூதுவராக அரசியல் நியமனம் பெற கூடும் என்றும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.