Wednesday, March 7, 2012

கிரிக்கெட்

தூள் கிளப்பியது இலங்கை! * தில்ஷன் அசத்தல் சதம் * கிளார்க், வார்னர் சதம் வீண்
 
 
அடிலெய்டு:
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இரண்டாவது பைனலில், தில்ஷன் சதம் கைகொடுக்க, இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் கிளார்க், வார்னர் அடித்த சதங்கள் வீணானது.
 முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. லீக் போட்டிகளில் சொதப்பிய இந்திய அணி வெளியேறியது. முதல் பைனலில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது பைனல் நேற்று அடிலெய்டில் நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
வேட் ஏமாற்றம்:
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் ஏமாற்றம். இம்முறை முதல் ஓவரிலேயே தில்ஷன் சுழலை கொண்டு வந்தார் ஜெயவர்தனா. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. வேட் 14 ரன்கள் எடுத்த போது, தில்ஷன் சுழலில் போல்டானார். 11, 12 ரன்களில் தப்பிப்பிழைத்த வாட்சன் (15), ரன் அவுட்டானார்.
"சூப்பர்' ஜோடி:
பின் வந்த கிளார்க், வார்னருடன் இணைந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டது. மகரூப் பந்தில் சிக்சர் அடித்த வார்னர், அடுத்து நிதானம் காட்டினார். இவருக்கு நல்ல "பார்ட்னர்ஷிப்' கொடுத்த கிளார்க், போகப் போக அதிரடிக்கு மாறினார். 
இரண்டு சதம்:
மகரூப் வீசிய 44வது ஓவரில் தலா 2 சிக்சர், 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து விளாசிய கிளார்க், 81வது பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் டேவிட் வார்னர், தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்தார். தவிர, அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த, 8வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமை பெற்றார். மூன்றாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த நிலையில், வார்னர் (100) ரன்னுக்கு அவுட்டானார். மைக் ஹசி (6) நிலைக்கவில்லை. தனது 7வது சதம் அடித்த கிளார்க்(117) ரன் அவுட்டானார். கடைசி பந்தில் டேவிட் ஹசி (7) போல்டாக, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. கடந்த முறை ஏமாற்றிய மலிங்கா, நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதிரடி துவக்கம்:
சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. பிரட் லீ, பட்டின்சன் பந்துகள் பவுண்டரிக்கு பறந்தன. இதனால் 6வது ஓவரில் இலங்கை அணியின் ஸ்கோர் 50ஐ கடந்தது. 
தில்ஷன் சதம்:
முதல் விக்கெட்டுக்கு 27.1 ஓவரில், 179 ரன்கள் சேர்த்த நிலையில், பட்டின்சன் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (80), அவரிடமே வீழ்ந்தார். அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த தில்ஷன், தனது 12வது சதம் அடித்தார். இவர் 106 ரன்களுக்கு அவுட்டாகினார்.
எளிதான வெற்றி:
அடுத்து வந்த சங்ககரா, சண்டிமால் ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. வாட்சன் பந்தில் சங்ககரா ஒரு பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 44.2 ஓவரில் 274 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த சங்ககரா (51), சண்டிமால் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை தில்ஷன் வென்றார்.

 ஜெயவர்தனாவுக்கு அபராதம்:
நேற்றைய போட்டியின் 44வது ஓவரின், 5வது பந்தை பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே "புல் டாசாக' வீசினார் மகரூப். இதை பவுண்டரிக்கு விரட்டினார் கிளார்க். இதனை "நோ பால்' என கிளார்க் கூற, சிறிய தாமதத்துக்குப் பின் அம்பயரும் ஏற்றுக்கொண்டார். உடனே ஜெயவர்தனா "டென்ஷன்' ஆனார். இரு அம்பயர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
இப்படி அம்பயர் முடிவை ஏற்காமல் வாதிட்ட ஜெயவர்தனாவுக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் கூறுகையில்,"" அணியின் கேப்டனாக இருப்பவர், சுய கட்டுப்பாட்டுடன் நடந்து, எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்திருந்தாலும், அம்பயர் தீர்ப்பை ஏற்றிருக்க வேண்டும். இவரது செயல் ஏற்கத்தக்கதல்ல. தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டாலும், விதி 2.1.3ன் படி அபராதம் விதிக்கப்படுகிறது,'' என்றார்.

 முன்னதாக கொண்டாட்டம்:
தில்ஷன் நேற்று 98 ரன்கள் எடுத்திருந்த போது, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்கோர் போர்டில் 100 ரன்கள் என்று காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சதம் அடித்துவிட்டதாக நினைத்த, தில்ஷன் "ஹெல்மெட்டை' கழற்றி, பேட்டினை உயர்த்தி மகிழ்ச்சியை கொண்டாடினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து, முறைப்படி 100 ரன்களை எட்டிய போது, எவ்வித கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.

மூன்றாவது பைனல்:
தற்போது ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றதால், மூன்றாவது மற்றும் கடைசி பைனலில் வெல்லும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். இப்போட்டி, அடிலெய்டில் நாளை நடக்கிறது.