வாரம் ரெண்டு தடவை சைக்கிளிங் போங்க... உடம்பு ஹெல்த்தியா இருக்கும்’’ என்கிறார் பிரபல பின்னணிப் பாடகி தன்விஷா. ‘சென்னை சைக்கிளிங்’ என்ற அமைப்பில் இருக்கும் தன்வி ஷா, வாரம் ஒரு முறையாவது, பல கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்
‘‘நான் இந்த அமைப்புல சேர்ந்து மூணு வருஷமாச்சு. இன்றைய சூழ்நிலைல குழந்தைகள்லருந்து பெரியவங்க வரை எல்லாருமே இயந்திர வாழ்க்கைக்கு அடிமையாயிட்டாங்க. குழந்தைங்க வெளிய வந்து விளையாடுறதில்லை. பெண்கள் வீட்டுவேலைகள் செய்யறதில்லை. விளைவு? உடம்பு சோம்பல்தனத்துக்குப் பழகிடுது... பருமனாயிடுது.
இந்த நிலைமையை விரட்டணும்னுதான் ‘வாரம் ஒரு தடவையாவது மகாபலிபுரம் வரை சைக்கிள் பயணம் செய்யுங்க’ன்னு பல பெண்களைத் தூண்டிக்கிட்டு இருக்கோம். சென்னைலருந்து மகாபலிபுரம் 52 கிலோமீட்டர். டூவீலர்ல இந்த தூரத்தை ஈஸியா கடந்துடலாம். சைக்கிள்ல கொஞ்சம் கஷ்டம். ஆனா, ஒரு தடவை சைக்கிள்ல பழகிட்டா, அடுத்து எப்பப் போகலாம்னு ஆசை வந்துடும்’’ என்கிற தன்வி சைக்கிள் பயணத்தால் ஏற்படும் நன்மைகளைப்பட்டியலிட்டார்.
‘‘சைக்கிளிங் ஆரோக்கியத்தைத் தரும். குறிப்பா பெண்களுக்கு ஏற்ற எக்ஸர்சைஸ். தேவையற்ற கொழுப்பை குறைச்சு, உடம்பை ட்ரிம்மா வச்சுக்கலாம். கால்களுக்கு நல்ல பயிற்சி. இதயக் கோளாறுகள் ஏற்படாது. உடம்புல ரத்த ஓட்டம் அதிகரிக்கும். டென்ஷன் குறையும். ‘சைக்கிளிங் செஞ்சா பார்கின்சன் நோயையே கட்டுப்படுத்த முடியும்’னு டாக்டர்கள் சொல்றாங்க.
அது சம்பந்தமா ஆய்வும் நடந்துகிட்டு வருது...’’ தன்வியை தொடர்ந்து, இக்குழுவைச் சேர்ந்த அனுராதாவும் அபர்ணாவும் தங்களுடைய சைக்கிளிங் எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்துகொண்டார்கள்.‘‘நான் பத்து மாசமாதான் சைக்கிளிங் செய்றேன். ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் மகாபலிபுரம் போயிடுவேன். கும்பலா போகும்போது ரொம்ப நல்லா இருக்கும்.
நாம கொஞ்சம் சோர்ந்து போயிட்டாலும் மத்தவங்க ஊக்கம் குடுப்பாங்க. 52 கிலோமீட்டர்னு சொன்னதும் முதல் தடவை உதறலா இருந்துச்சு. ஆனா, அங்கே போய்ச் சேந்ததும் கிடைச்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. என்னோட பெரிய ரைடுன்னா, பாண்டிச்சேரிக்கு 100 கிலோமீட்டர் தூரம் சைக்கிள்லயே போனதுதான். இப்போ சைக்கிளிங் மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. சொந்தமா சைக்கிள் வாங்கிட்டேன்.
அடுத்த டார்கெட் 200 கிலோமீட்டர். அதோடு, வாரம் ரெண்டு முறையாவது ஆபீஸுக்கு சைக்கிள்ல போணும்னு முடிவு செஞ்சிருக்கேன்’’ என்கிறார் அனுராதா.அபர்ணாவோ வேறு மாதிரி சொல்கிறார்... ‘‘எனக்கு அனு மாதிரி கும்பல்ல போகப் பிடிக்காது. நினைச்சா சைக்கிளை எடுத்துகிட்டு மூணு மணி நேரம் காணாம போயிடுவேன்.
விடியற்காலையில இயற்கை காட்சிகளை ரசிச்சுகிட்டு, பிடிச்ச பாட்டுகளைக் கேட்டுக்கிட்டு சைக்கிள்ல போறப்போ ஜில்லுன்னு ஒரு காத்து முகத்தை வருடுமே... அது ஒரு சுகமான அனுபவம். பயணம் சுகமா இருக்கணும்னா, சரியான சைக்கிளைத் தேர்வு செய்யணும். எடையை குறைக்க விரும்புறவங்க, சைக்கிளிங் செஞ்சா, கண்டிப்பா சீக்கிரமே பலன் கிடைக்கும்.
ரொம்ப தூரம் சைக்கிள்ல போறப்போ உடம்புல இருக்குற தண்ணி எல்லாம் வத்திப் போயிடும். அதை ஈடுகட்டுறதுக்கு நிறைய தண்ணி, பழங்கள் சாப்பிடணும். எதுவுமே சாப்பிடாம சைக்கிள் ஓட்டினா, கை கால் எல்லாம் பிடிச்சுக்கும். எல்லாத்தையும்விட சைக்கிளிங், தன்னம்பிக்கையையும் நம்ம சக்தியையும் உணரவைக்கிற அற்புதமான விளையாட்டு!’’
அபர்ணா கடந்த வாரம்தான் தன் தோழியுடன் இணைந்து 100 கிலோ மீட்டர் தூர இலக்கை சைக்கிளில் அடைந்திருக்கிறார். பல நாடுகள் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும், பெட்ரோல் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் சைக்கிள் சவாரியை ஊக்குவிக்கின்றன. வாரம் ஒருமுறை நீண்ட தூர சைக்கிள் பயணம் செய்வது, பெண்களின் உடலுக்கு ஆரோக்கியம்.அன்றாட வேலைகளுக்கும் சைக்கிள் பயன்படுத்துவது சிக்கனமும்கூட

No comments:
Post a Comment